யாழ்ப்பாணத்தில் டெங்குத் தொற்றுக் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். அரியாலையைச் சேர்ந்த ஒருவரும், மல்லாவியைச் சேர்ந்த ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.
ஏற்கனவே டெங்குத் தொற்றால் இளவயது உயிரிழப்புக்கள் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ள நிலையில், தற்போது இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொக்குவிலில் உள்ள வேலைத்தளத்தில் அரியாலையைச் சேர்ந்த 31 வயதான இளைஞன் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார்.
அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.
செல்வராஜா சிந்துஜன் என்ற இளைஞரே உயிரிழந்தவராவார். இவர் இரு மாதங்களேயான குழந்தையின் தந்தை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவருக்குக் கடந்த சில நாள்களாக காய்ச்சல் காணப்பட்டது என்று தெரியவருகின்றது. உடற்கூறாய்வு பரிசோதனையில் இவரது இறப்புக்கு டெங்குத் தொற்றே காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை, டெங்குத் தொற்றுக்குள்ளாகி யாழ்ப்பாணம் போதனா மருத்துமனையில் சேர்க்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவரும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரின் பெயர் விவரங்களை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை.
யாழ்ப்பாணத்தில் டெங்குத் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், உயிரிழப்புக்களும் ஏற்பட ஆரம்பித்துள்ளன. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், குடியிருப்புக்கள் மற்றும் சுற்றாடலைச் சுத்தமாக வைத்திருந்து, டெங்கு நுளம்பு உற்பத்திக்கு ஏதுவான இடங்களை அழிக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.