யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள இரு கடைகள் அண்மையில் தீக்கிரையாகிய சம்பவம் தொடர்பான விசாரணைகளில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் அண்மையில் இரு கடைகள் தீக்கிரையாகின. இரவு நேரம் நடந்த இந்தச் சம்பவம் தற்செயலாக நடந்த விபத்து என்றே ஆரம்பத்தில் நம்பப்பட்டது.
ஆனால் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் இது விபத்துச் சம்பவம் அல்ல திட்டமிட்ட குற்றச் செயல் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
கடைகள் தீக்கிரையானமை திட்டமிட்ட குற்றச் செயல் என்பதைக் கண்டறிந்த யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பதில் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் பிரதீத் தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளைத் தீவிரப்படுத்தியிருந்தது.
விசாரணைகளின் தொடர்ச்சியாக இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து குரல் பதிவுகள் போன்ற ஆதாரங்களைக் கைப்பற்றியுள்ளது இந்தப் பொலிஸ் குழு.
இந்தச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி பெல்ஜியத்தில் இருக்கின்றார் என்பதும், அவர் தனிப்பட்ட பகை காரணமாக கூலிப்படையை அமர்த்தி கடையைத் தீக்கிரையாக்கியுள்ளார் என்பதையும் கண்டறிந்தனர் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார்.
இந்தச் சம்பவத்தில் ஒரு கடையே இலக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அருகில் இருந்த கடையும் தீக்கிரையாகியுள்ளது. இலக்கு வைக்கப்பட்ட ஆடைகத்துக்கு சுமார் 7 கிளைகள் இருக்கின்றன என்றும், அவை அனைத்தையும் தீக்கிரையாக்கவும், கார் ஒன்றைத் தீயிட்டு எரிக்கவும் கூலிப்படை அமர்த்தப்பட்டிருக்கின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரது பெரியம்மா வெளிநாட்டில் உள்ளார். அவரே சம்பவத்தின் சூத்திரதாரியை, கைது செய்யபட்ட சந்தேகநபர்களுடன் தொடர்புபடுத்தி விட்டுள்ளார். கடைகளை எரிப்பதற்கு 12 லட்சம் ரூபாவும், காரை எரிப்பதற்கு 7 லட்சம் ரூபாவும் கோரப்பட்டிருக்கின்றது.
முற்பணமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொகை, வங்கி ஊடாக வழங்கப்பட்ட நிலையில், கூலிப்படை கடை ஒன்றையும், கார் ஒன்றையும் தீயிட்டுள்ளது. ஏனைய கடைகளைத் தீயிடும் அவர்களின் திட்டம் செயற்படுத்தப்படுமுன்னர், யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் அவர்களை அலேக்காகக் தூக்கியுள்ளனர்.
சந்தேகநபர்களின் கைபேசிகளில் இருந்து குரல் பதிவுகள், குறுந்தகவல்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பெல்ஜியத்தில் உள்ள பிரதான சூத்திரதாரியைக் கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் (இன்ரபோல்) உதவி நாடப்படும் என்று பொலிஸ் தகவல்கள் யாழ்நாதத்துக்குத் தெரிவித்தன.
தீக்கிரையான கடைகளில் இருந்த பொருள்களின் பெறுமதி பல கோடி ரூபா என்று கூறப்படுகின்றது. அங்கிருந்த பொருள்கள் அனைத்தும் முற்றாக தீயில் எரிந்து அழிந்திருந்தன. சரியான நேரத்தில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் அந்த வரிசையில் இருந்த ஏனைய கடைகள் தப்பித்துக் கொண்டன.