இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு நடத்தப்படுவதற்கு எதிராக நீதிமன்றங்களில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
இன்று யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிபதிகள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு கடந்த மாதம் 21ஆம் திகதி நடைபெற்றது. தலைவர் தெரிவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரா சீ.யோகேஸ்வரனும் போட்டியிட்டனர்.
இறுதி நேரத்தில் போட்டியில் இருந்து சீ.யோகேஸ்வரன் விலகிக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.சிறீதரனுக்கு ஆதரவளிக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் மற்றும் ஏ.சுமந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர்.
தலைவர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பில் சி.சிறீதரனுக்கு ஆதரவாக 184 வாக்குகளும், எம்.ஏ.சுமந்திரனுக்கு ஆதரவாக 137 வாக்குகளும் கிடைக்க, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்பின்னர் நடந்த நிர்வாகத் தெரிவில் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பான ஏற்பட்ட குழப்பங்களை அடுத்து, கட்சியின் தேசிய மாநாட்டை காலவரையின்றி ஒத்திவைத்தார் கட்சியின் முன்னாள் தலைவரான மாவை சேனாதிராஜா.
அதன்பின்னர் இலங்கைக் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள் இரு பிரிவாகப் பிரிந்து – நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தரப்பும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டி சமூக வலைத்தளங்களில் மோதிக் கொண்டனர்.
இந்தநிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சி.சிறீதரன் வவுனியாவில் கலந்துரையாடல் ஒன்று நடத்தி சில இணக்கப்பாடுகளை எட்டி, கட்சி நிர்வாகப் பதவிகளுக்கான பட்டியல் ஒன்றைத் தயாரித்திருந்தார். கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார்.
இந்தப்பின்னணியில் இன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய மாநாட்டுக்கு 21 நாள்களுக்கு முன்னர் அறிவித்தல் விடுவிக்கப்பட வேண்டும் என்பது கட்சியின் யாப்பில் உள்ளது என்றும், அந்த நடைமுறை பின்பற்றப்படாமல் தேசிய மாநாட்டுக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது என்று மனுதாரர்கள் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை விசாரித்த யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்ட நீதிமன்றங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு இடைக்காலத் தடை உத்தரவு வழங்கிக் கட்டளைகள் பிறப்பித்துள்ளன.