North

யாழ். பல்கலை மாணவன் மரணத்தில் பகீர் தகவல்கள்! – தாக்குதல் நடத்திவிட்டு தப்பியபோது விபரீதம்!

யாழ்ப்பாணம், நீர்வேலியில் நேற்று (21.02) அதிகாலை நடந்த விபத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்திருந்தநிலையில், விசாரணைகளில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று அதிகாலை நடந்த விபத்தில் சிறுப்பிட்டிப் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் கலைப்பீட முதலாம் வருட மாணவனான, மானிப்பாயைச் சேர்ந்த ரமேஸ் சகீந்தன் என்ற 22 வயது இளைஞரே உயிரிழந்தார்.

மோட்டார்சைக்கிளில் பயணித்த இவர் வீதியின் குறுக்கே பாய்ந்த நாயுடன் மோதி விபத்துக்குள்ளானார் என்று தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் இவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விவசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில், மானிப்பாயைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனுடன் ஒரே மோட்டார்சைக்கிளில் பயணித்துள்ளார்.

உயிரிழந்த இளைஞரும், நண்பர்களும் உடுப்பிட்டியில் உள்ள வீடொன்றின்மீது தாக்குதல் நடத்துவதற்காகவே அதிகாலை புறப்பட்டுச் சென்றுள்ளனர். மீண்டும் திரும்பிவரும்போதே விபத்தில் சிக்கியுள்ளனர்.

உடுப்பிட்டியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதுடன், வாகனங்களுக்கும் தீ வைக்க முயன்றுள்ளனர். வீட்டிலிருந்தவர்கள் உசாரானாதால் அங்கிருந்து தப்பி வந்துள்ளனர். அப்போது நாய் குறுக்கே பாய்ந்துள்ளது.

விபத்தின் பின்னர் அந்த இடத்தைச் சுத்தம் செய்து தடயங்களை மறைத்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவரை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று பின்னர், நோயாளர் காவுவண்டியை அழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள், மருத்துவமனையில் காயங்களுடன் சேர்க்கப்பட்டவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த இளைஞருக்கு வயிற்றின் கீழ் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. மோட்டார் சைக்கிளின் எரிபொருள் தாங்கி தாக்கியதில் அவருக்கு உயிராபத்தான காயங்கள் ஏற்பட்டிருந்தன என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts