நெடுங்கேணியில் உள்ள வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தின இரவு வழிபாட்டுக்குப் பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியதை அடுத்து அங்கு பதற்றமான நிலைமை தோன்றியுள்ளது.
ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இரவு வழிபாட்டில் ஈடுபட முடியாது என்றும், பக்தர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் பொலிஸார் வற்புறுத்தியதை அடுத்தே பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
சிவராத்திரி தினமான இன்று ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. வவுனியா மாவட்ட நீதிமன்றமும் வழிபாடுகளுக்கு அனுமதி வழங்கியிருந்தது.
இனமுறுகல் ஏற்படும் வாய்ப்புள்ளதால், சிவராத்திரி தின வழிபாடுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று நெடுங்கேணி பொலிஸார் தாக்கல் செய்திருந்த மனுவை வவுனியா நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
அதன்பின்னரும் சிவராத்திரி தின வழிபாடுகளுக்குத் தடை ஏற்படுத்தும் வகையில், ஆலயத்தின் பூசகர் உட்பட இருவர் நேற்று நெடுங்கேணிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இன்று சிவராத்திரி தின வழிபாடுகளுக்காக ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்குச் சென்ற பக்தர்கள் பொலிஸாரால் தடுக்கப்பட்டனர். அதேபோன்று சாந்தபோதி தேரர் தலைமையிலான குழு ஒன்று வெடுக்குநாறி மலைக்குச் செல்ல முயன்றநிலையில் அவர்களும் தடுக்கப்பட்டனர். அதனால் அங்கு பதற்ற நிலைமை தோற்றுவிக்கப்பட்டது.
நீண்ட இழுபறியின் பின்னர் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு பக்தர்கள் கால்நடையாகவே செல்லமுடியும் என்று பொலிஸார் அறிவித்தனர். அதனால் பக்தர்கள் கால்நடையாக ஆலயத்துக்குச் சென்றதுடன், குடிதண்ணீரையும் காவிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தநிலையில், மாலை 6 மணிக்குப் பின்னர் எவரும் ஆலயத்தில் தங்கமுடியாது என்று பொலிஸார் திடீரென அறிவித்துள்ளனர். ஆனால் பக்தர்கள் அங்கிருந்து வெளியேற மறுப்புத் தெரிவித்துவருவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பூசை வழிபாடுகளை மேற்கொண்ட ஆறுபேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.