ஹரிகரனோடு கனடா செல்ல 43 லட்சம் ரூபா – யாழில் நடந்த தில்லாலங்கடி வேலை!

Yarl Naatham

கனடாவில் நடக்கவுள்ள பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சிக்கு செல்லவுள்ள ஊடகவியலாளர்களுடன் சேர்ந்து செல்லலாம் என்று கூறி, நூதனமான முறையில் பல லட்சங்கள் மோசடி செய்யப்பட்டுள்ளது.

சுமார் 43 லட்சம் ரூபாவை இவ்வாறு ஏப்பமிட்ட குற்றச்சாட்டில், ஊடகவியலாளர் என்று கூறப்படும் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழர்களிடையே கனடா செல்லும் மோகம் அதிகரித்துள்ளதைப் பயன்படுத்தி இந்த மோசடி நடந்துள்ளது. ஊடக நிறுவனம் ஒன்றின் ஊடகவியலாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவரே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரிடம் பல லட்சங்களைக் கறந்துள்ளார்.

கனடாவில் நடக்கவுள்ள பெரும் இசைநிகழ்ச்சிக்கு ஊடகவியலாளர் குழு ஒன்று செல்லவுள்ளது என்றும், அந்தக் குழுவுடன் சேர்ந்து கனடா செல்லலாம் என்றும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு ஆசை காட்டியுள்ளார் அந்த மோசடிப் பேர்வழி.

ஊடகவியலாளர் அடையாள அட்டையைப் பெற ஊடக நிறுவனத்துக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி, 43 லட்சம் ரூபாவைப் பெற்றுக்கொண்ட அந்த மோசடிப் பேர்வழி, அடையாள அட்டை ஒன்றையும் வழங்கியுள்ளார்.

பணத்தைக் கொடுத்து நீண்ட நாள்களான நிலையில், கனடா செல்வதற்கான எந்த ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதையடுத்து இளைஞர் தனது பணத்தை மீளத்தருமாறு கோரியுள்ளார். அதன்பின்னர் மோசடிப் பேர்வழியைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

பணத்தைக் கொடுத்து ஏமாந்த இளைஞன் அதன்பின்னர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் இது தொடர்பாக முறைப்பாடு செய்திருந்தார்.

விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு, மோசடிப் பேர்வழி வவுனியாவில் தலைமறைவாக இருக்கின்றார் என்று தகவல் கிடைத்துள்ளது.

வவுனியா சென்ற பொலிஸார் மோசடிப் பேர்வழியைக் கைது செய்து யாழ்ப்பாணம் கொண்டுவந்தனர். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் ஊடக அடையாள அட்டை வழங்கிய நிறுவனத்தையும், அவரே நடத்திவந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தநபர் பல்வேறு மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தமை விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது. சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a comment
error: Content is protected !!