பலவந்தமாகப் போதையேற்றப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வழங்கியுள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரே தனக்குப் பலவந்தமாக ஊசி மூலம் போதைப்பொருள் ஏற்றப்பட்டது என்றும், 10 பேர்வரையில் தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என்றும் வாக்குமூலம் வழங்கியிருக்கின்றார்.
தாய், தந்தை இறந்தபின்னர் இந்தப் பெண்ணும் அவரது சகோதரியும் பருத்தித்துறை, மருதங்கேணியில் உள்ள பாதுகாப்பு இல்லம் ஒன்றில் நீதிமன்ற உத்தரவின்படி தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
பெண்ணின் சகோதரி கடந்த டிசெம்பர் மாதம் உயிரிழந்திருந்த நிலையில், இந்தப் பெண் சகோதரனால் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
மீண்டும் அவர் மருதங்கேணியில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் விடப்பட்ட நிலையில், தனக்கு போதை ஊசி ஏற்றி, பல ஆண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கினர் என்று தெரிவித்துள்ளார்.
அதையடுத்து அவர் பரிசோதனைகளுக்காக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த பருத்தித்துறைப் பொலிஸார், யாழ்ப்பாணம் பொலிஸாருக்கும் அறிவித்தனர்.
யாழ்ப்பாணம் பொலிஸார் பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு கடந்த திங்கட்கிழமை சென்று பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் பெண் மருதங்கேணியில் உள்ள இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 10 பேர் வரையான ஆண்கள் தன்னைத் துன்புறுத்தி வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என்று அந்தப் பெண் வாக்குலத்தில் தெரிவித்துள்ளார்.
அடித்து, சிகரெட்டால் சூடு வைத்து வன்புணர்வுகு்கு உட்படுத்தினர். ஊசி மூலம் போதைப்பொருள் செலுத்தினர் என்று அந்தப் பெண் கூறியுள்ளார்.
மருத்துவ பரிசோதனையில் பெண்ணின் உடலில் சூட்டுக் காயங்கள், தாக்கப்பட்ட அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் கூறுகின்றன. மருத்துவ அறிக்கையின் விவரங்களை மருத்துவர்கள் வெளியிட மறுத்துவிட்டனர்.
தன்னை வல்லுறவுக்குட்படுத்தினர் என்று அந்தப் பெண் 10 பேரின் அடையாளங்களைக் குறிப்பிட்டுள்ளனர். பெண்ணின் வாக்குமூலத்துக்கு அமைய பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பெண் ஏற்கனவே மனநலப் பிறழ்வு கொண்டவர் என்று தெரியவருகின்றது. அவரது வாக்குமூலத்தில் குறிப்பிட்ட அடையாளங்களைக் கொண்டு சிலரை விசாரணை வளையத்துக்குள் பொலிஸார் கொண்டுவந்துள்ளனர். ஆயினும் இன்னமும் சந்தேகநபர்கள் கைது செய்யப்படவில்லை. போதுமான ஆதாரங்களை பொலிஸார் தேடிவருகின்றனர்.