4 வயதான தனது மகளுக்கு சிறுநீரகப் பாதிப்பு என்று பொய் கூறிப் பணம் சேகரித்த தந்தை ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், கல்வியங்காடு சந்தைப் பகுதியில் 4 வயது மகளுடன் தந்தை ஒருவர் பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
தனது மகளுக்கு இரு சிறுநீரகங்களும் செயழிழந்துள்ளன என்றும், அதற்கான சிகிச்சைக்குப் பணம் தேவை என்று கூறியே அவர் பொதுமக்களிடம் பணம் சேகரித்துள்ளார்.
தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலைக்கு மத்தியில் சிறுமியைச் சக்கர நாற்காலியில் அமர்த்திச் சென்று தந்தை பணத்தைச் சேகரித்துள்ளார். சிறுமியின் நிலையைக் கண்டு மனமிரங்கிப் பொதுமக்கள் பலரும் பெரும் பணத்தை வழங்கியுள்ளனர்.
கடும் வெயிலுக்கு மத்தியில் சிறுமியை வைத்து தந்தை யாசகம் பெறுவது தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது. சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சிறுமியை மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் சேர்ப்பித்துள்ளனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் சிறுமியின் சிறுநீரகங்கள் இரண்டும் பழுதடையவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆரோக்கியமான சிறுமியை வைத்தே தந்தை மக்களை ஏமாற்றிப் பணம் சேகரித்துள்ளார்.
தற்போது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, காத்தான்குடியில் இருந்து யாழ்ப்பாணம் வந்தே அவர் இந்த ஏமாற்று வேலையைச் செய்திருக்கின்றார்.
தற்போது சிறுமி சிறுவர் காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.