North

பிள்ளையார் திருமணமான நாகப்பட்டினம் – கே.கே.எஸ். கப்பல் சேவை! – பதிவு செய்தவர்கள் கடும் விசனம்!

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பயணத்துக்கான பதிவுகளை மேற்கொண்டிருந்த பயணிகள் கப்பல் சேவையின் தொடர்ச்சியான ஒத்திவைப்புக்களால் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன், விசனமும் வெளியிட்டுள்ளனர்.

நாகபட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை கடந்த 13ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து அதனூடாகப் பயணிப்பதற்கு பலர் பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்.

ஆயினும் அறிவிக்கப்பட்டபடி கடந்த 13ஆம் திகதி பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவில்லை. சில சட்டரீதியான அனுமதிகள் கிடைக்காமையால் கப்பல் சேவை ஆரம்பிப்பது தாமதிக்கப்படுகின்றது என்று கப்பல் சேவையை நடத்தும் நிறுவனம் அறிவித்திருந்தது.

அதன்பின்னர் நாளை 17ஆம் திகதி பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் நாளையும் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்காது என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் சேவை எதிர்வரும் 19ஆம் திகதியே ஆரம்பிக்கப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவுகளை மேற்கொண்ட பயணிகள் எதிர்வரும் 19ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னர் தாங்கள் விரும்பிய திகதிகளில் பயணிக்க முடியும் என்று கப்பல் சேவையை நடத்தும் நிறுவனம் அறிவித்துள்ளது.

செலுத்திய கட்டணத்தை முழுமையாக மீளப் பெற விரும்பினால் customer.care@sailindsri.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts