யாழ்ப்பாணம், புத்தூரில் இராணுவ வாகனம் மோதியதில் 23 வயது யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். பிறந்ததினமான இன்று யுவதி உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புத்தூர், வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். சைக்கிளில் உறவினர் வீடொன்றுக்குப் பால் கொடுத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போதே விபத்து நடந்துள்ளது.
புத்தூர் மீசாலை வீதியில் வீரவாணிச் சந்தியில் வீதியைக் கடப்பதற்காக வீதியோரம் சாருஜா நின்றுள்ளார். அவர் நின்ற திசைக்கு எதிர்த்திசையில் புத்தூர் சந்தியில் இருந்து வந்துள்ளது.
வீதியின் இடதுபுறமாக வந்த இராணுவ வாகனம் வலது புறத்தில் வீதியைக் கடக்கக் காத்திருந்த சாருஜா மீது மோதி, அங்கிருந்த மரம் ஒன்றுடன் மோதி கவிழ்ந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த சாருஜா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். யுவதியின் உடல் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சாருஜாவின் பிறந்ததினம் இன்றாகும். பிறந்த தினத்தன்று அவர் உயிரிழந்துள்ளமை பிரதேச மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்துச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் அச்சுவேலிப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.