North

ஏடு தொடக்கிவிட்டு வந்த தந்தையைப் பலியெடுத்த எமன்! – யாழில் நடந்த சோகம்

யாழ்ப்பாணம், வடமராட்சியில் உள்ள வல்லைப் பாலத்தில் இன்று (12.10) நடந்த விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், தற்போது பருத்தித்துறையில் வசிக்கும் துரைலிங்கம் மலைமகன் என்னும் 38 வயதுடையவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று முற்பகல் 9.45 மணியளவில் நடந்துள்ளது. பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வேலை நிமித்தம் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த மலைமகனை எதிர்த்திசையில் வந்த பட்டா ரக வாகனம் மோதியுள்ளது.

வல்லைப் பாலத்தில் தடுப்பைப் பிரயோகித்ததால் பட்டா ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதியுள்ளது. விபத்தில் சிக்கிய மலைமகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விஜயதசமியான இன்று தனது குழந்தைக்கு ஏடு தொடக்கிவிட்டு, யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்துக்குச் செல்லும்போதே இந்த விபத்து நடந்துள்ளது என்று இறப்பு விசாரணைகளில் தெரியவருகின்றது.

இரும்பிலான வல்லைப்பாலத்தில் அண்மைக்காலமாக அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன. இரும்புப் பாலம் வழுக்குவதாலேயே இந்த விபத்துக்கள் நடக்கின்றன என்று பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர். தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ளதால் பாலத்தில் பயணிக்கும்போது அவதானமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts