காங்கேசன்துறை அஞ்சல் அலுவலகம் சுமார் 34 வருடங்களின் பின்னர் மீண்டும் காங்கேசன்துறையில் இயங்க ஆரம்பித்துள்ளது.
போர் காரணமாக 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் காங்கேசன்துறைப் பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேறியதையடுத்துக் காங்கேசன்துறை இராணுவ உயர்ப் பாதுகாப்பு வலயமாக இருந்தமையால் மாவிட்டபுரம் பகுதியில் தற்காலிகமாக அஞ்சல் அலுவலகம் இயங்கி வந்தது.
தற்போது மீண்டும் காங்கேசன்துறைப் பகுதியில் குறித்த அஞ்சல் அலுவலகம் தனது சேவையை ஆரம்பித்துள்ளது.
முன்னர் காங்கேசன்துறை- பருத்தித்துறை வீதியில் சொந்தக் காணியில் இந்த அஞ்சல் அலுவலகம் முதலில் அமைந்திருந்தது. ஆனால், மீண்டும் அந்தக் காணியில் இயங்குவதற்குப் பெரும் நிதிச்செலவு ஏற்படும் என்பதால் தற்காலிகமாகத் தனியார் கட்டடம் ஒன்றிலேயே அஞ்சல் அலுவலகம் தனது சேவையை ஆரம்பித்துள்ளது.