சாவகச்சேரி மருத்துவமனையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இ.அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது.
மன்னார் மருத்துவமனைக்குள் அத்துமீறிப் புகுந்து குழப்பங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் மருத்துவர் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுப் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று மன்னார் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மருத்துவர் அர்ச்சுனா நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.
மருத்துவரின் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள், மருத்துவர் அர்ச்சுனா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் என்றும், மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆயினும் வழக்காளிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் அதை ஆட்சேபித்ததுடன், அவர் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடுவதை நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்ததுடன், இன்று காலையும் அவர் பதிவொன்று இட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினர்.
அத்துடன் மருத்துவர் அர்ச்சுனாவுடன் தொடர்புடைய பல குரல் பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளமை தொடர்பாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அவற்றை ஆராய்ந்த மன்னார் நீதிமன்றம் மருத்துவர் அர்ச்சுனாவைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை, மருத்துவர் அர்ச்சுனா இன்று தனது பேஸ்புக் பக்கத்தை முடக்கியுள்ளார் என்று கூறப்படுகின்றது.