வடமராட்சி, கற்கோவளத்தில் நடந்த இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
தொழிற்போட்டி காரணமாகவே இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் நடந்திருக்கலாம் என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று தெரிவித்த பொலிஸார், இந்தச் சம்பவம் தொடர்பாக மற்றுமொருவர் தேடப்பட்டு வருகின்றார் என்றும் குறிப்பிட்டனர்.
கற்கோவளத்தில் கணவன், மனைவி நேற்று அதிகாலை வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தனர். 53 வயதான மாணிக்கம் சுப்பிரமணியம், அவரது மனைவியான 54 வயதான மேரி ரீட்டா என்பவர்களே சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.
அவர்களின் உடலில் காயங்கள் காணப்பட்ட நிலையில், அவர்கள் கல்லால் தலையில் அடிக்கப்பட்டும், துணியால் கழுத்து நெரிக்கப்பட்டும் உயிரிழந்திருந்தமை உடற்கூற்றுப் பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார், சந்தேகநபர்கள் இருவரைக் கைது செய்துள்ளதுடன், மற்றுமொருவரைத் தேடி வருகின்றனர்.